கேரளாவைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப், சென்னை ஐஐடியில் கடந்த வாரம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த விசாரணை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் ஃபாத்திமாவுக்கு நீதி கோரியும் நிறுவன படுகொலைக்கு எதிராகவும் திக, திமுக, மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்எல்ஏ எழிலரசன், "கேரள மாநிலத்தைச் சேர்த்த ஃபாத்திமாவுக்கு வேறு மாநிலத்தில் படிக்க இடம் கிடைத்தும்கூட தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்றே சென்னை ஐஐடியை தேர்வு செய்தார்.
அங்கு நடத்தக்கூடிய தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துச் சிறப்பான மாணவி எனப் பெயர் பெற்றவர். கடந்த 9ஆம் தேதி தன்னால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்ற விளிம்பு நிலைக்குச் சென்ற அவர், தன்னுடைய மரணத்திற்கு யாரெல்லாம் காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஃபாத்திமாவுக்கு நீதி வேண்டி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் அதே நேரத்தில் அந்த இடத்தில் தற்கொலைக்கான எந்தச் சூழ்நிலையும் இல்லை, இதனால் இது கொலையா? என்று அவரது பெற்றோர் சந்தேகத்தை எழுப்புகின்றனர். மாணவி தற்கொலைக்குக் காரணமாகச் சுட்டிக் காட்டியிருக்கும் மூன்று பேராசிரியர்கள் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவர்கள் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற இன்னொரு பிரச்னை நடக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 5 புதிய மாவட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைக்கும் நாள், நேரம் அறிவிப்பு!