சென்னையில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதுகுறித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும், கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள், வழிமுறைகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள வழிமுறைகள், நடைமுறைகள் கீழ்வருமாறு:
1. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் (Containment Zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.
2. பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர):
- கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும்.
- அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலைப் பணிகள் அனுமதிக்கப்படும்.
- சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & EXPORTS UNITS): சென்னை மாநகராட்சி ஆணையர்/மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக்கேற்ப, 25 சதவிகித பணியாளர்களுடன் (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.
• தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (IT & ITeS): 10 சதவிகித பணியாளர்களைக் கொண்டு (குறைந்தது 20 நபர்கள்) செயல்பட அனுமதிக்கப்படும். நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும்.