சென்னை:கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, அடிப்படை ஊதியம் ரூபாய் 8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 200 என்றும் "ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி" என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதனை களையக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தினர். இதைனையடுத்து, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததுடன், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கப்படும் என்ற அறிவிப்பை இடம் பெறச் செய்தார்.
மேலும், கடந்த 2023 ஜனவரி 1ஆம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊதிய முரண்பாட்டை களைவதற்கான குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் அறிக்கையைப் பெற்று மூன்று மாதத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது அறிவித்திருந்தார். ஆனால், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
இதனையடுத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக கடந்த 8வது நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (அக்-5) காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்களையும் குண்டு கட்டாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றி வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.