சென்னை:விடியல் ஆட்சியில் தங்களுக்கும் விடியல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதே நேரத்தில் பள்ளி கல்வித்துறை வளாகத்திலுள்ள கழிவறைகளைப் பூட்டி வைத்துள்ளனர். இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி, இசை, ஓவியம் ஆகிய பாடப்பிரிவுகளில் கற்பிக்க 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் இவர்கள் பணி நிரந்தரம் வேண்டி கடந்த ஆட்சியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது இவர்களை நேரில் சந்தித்த திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக பணி நிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்தார்.
மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்து 9 மாதம் கடந்தும் அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பகுதிநேர ஆசிரியர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே போதும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.