வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், கடலூர் மகளிர் நீதிமன்றம், கணவன் மற்றும் கணவனின் பெற்றோருக்கு தலா இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்த பெற்றோர், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்க கோரியிருந்தனர். அந்த மனுவில் ’’மகனுக்கு திருமணமான நாளிலிருந்து தாங்கள் தனியாகத்தான் இருந்து வந்ததாகவும், மருமகளின் தற்கொலைக்கு தொடர்பு இல்லை’’ என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார். மகனுடன் சேர்ந்து மனுதாரர்களும் மருமகளை துன்புறுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வரதட்சணை கொடுமையால் பெண்கள் தற்கொலை செய்துகொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். ஒருபுறம் மகனுடன் வசிக்கவில்லை என்று கூறி தப்பிக்கும் பெற்றோர், மகனுடன் சேர்ந்து கொண்டு வரதட்சணை மற்றும் பணம் நகைகளை பெறுவதாகவும் தெரிவித்தார்.