சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது.இங்கு ப்ரீ.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ளது. இந்நிலையில் இன்று காலை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. இதில் சிட்லபாக்கம் பகுதியிலும் தொடர் மழை காரணமாக தனியார் பள்ளியில் எல்.கே.ஜி, யு.கே.ஜி படித்து வரும் சுமார் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்ல 10 நிமிடங்கள் காலதாமதமானதாக வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர்களை பள்ளி வளாகத்தின் உள்ளே அனுமதிக்காத நிர்வாகம் அவர்களை கொட்டும் மழையில் நிற்க வைத்துள்ளது. மழையின் காரணமாக தான் சில நிமிடங்கள் தாமதமானது என குழந்தைகளின் பெற்றோர்கள் எடுத்துக் கூறியும் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நீண்ட நேரமாக கொட்டும் மழையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய உதவி ஆணையாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.ஆனாலும் பள்ளி நிர்வாகம் பள்ளி குழந்தைகளை உள்ளே அனுமதிக்க மாட்டோம் என பிடிவாதமாக இருந்ததால் அங்கு மேலும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் எம்எல்ஏ காவல் துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் பள்ளி நிர்வாகத்தின் விதிமுறைகளை மீற மாட்டோம் என்று கராறாக திட்டவட்டமாக பேசி அவர்களை அனுப்பிவிட்டனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது நாங்கள் பள்ளியின் விதிமுறைகளை யாருக்காகவும் ஒரு காலும் அனுசரிக்க மாட்டோம்,பள்ளியில் படிப்பு மற்றும் ஒழுக்கம் உள்ளிட்டவை மட்டுமே நாங்கள் கருத்தில் கொண்டு இப்பள்ளியை நடத்தி வருகிறோம் எனக் கூறினர்.