சென்னை:நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த யுவராஜ் எனும் மாணவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்துகொண்டார். மாணவர்களின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டையைக்கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில், தலைமை ஆசிரியர் நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 45 விழுக்காட்டில் இருந்து 90 விழுக்காடாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப்புகார் குறித்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 விழுக்காடு நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தனக்கு எதிரான பொய்யான புகார் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று நிரூபணம் ஆவதாகக்கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.