சென்னை:உலகையே உலுக்கிய கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாத இறுதியில் அதிகரிக்கத் தொடங்கியது. அச்சமயம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்ததால், புதிதாகச் செவிலியர், மருத்துவர்கள், மருத்துவத் துறைப் பணியாளர்களைத் தேர்வுசெய்தனர்.
அப்போது கரோனா தீநுண்மி தொற்றில் பணிபுரியும் பணியாளர்களுக்குப் பணி நியமனம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறிவந்தனர்.
ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்துவந்த மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு வரும் 28ஆம் தேதிமுதல் பணி வழங்கப்படாது என மருத்துவத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவப் பணியாளர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முற்பட்டனர். அவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து மண்டபத்தில் அடைத்துவைத்துள்ளனர்.
இது குறித்து தொழில்நுட்பப் பணியாளர்கள் கூறும்பொழுது, "கரோனா தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்படும் எனத் தெரிந்தும் எங்கள் உயிரையும் பெரிதாகக் கருதாமல் மக்களுக்காகச் சேவை செய்யவே பணிக்கு வந்தோம்.
அப்பொழுது எங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால் தற்போது தீநுண்மி தொற்றில் தாக்கம் குறைந்துள்ளதால் பிப்ரவரி 28ஆம் தேதிக்குப் பிறகு வேலை இல்லை என மருத்துவக் கல்லூரிகளில் தெரிவிக்கின்றனர்.
மருத்துவத் துறையால் கலங்கி நிற்கும் தொழில்நுட்பப் பணியாளர்கள் படித்து பட்டங்களைப் பெற்ற எங்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். மேலும் கரோனா காலத்தில் எங்களுக்கு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் நேரடியாக ஊதியம் வழங்காமல் தனியார் நிறுவனம் மூலமே வழங்கினர். அவர்களும் கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.
கரோனா தொற்றிற்காகப் பணிபுரிந்தபோது மருத்துவக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் தங்கவைக்கப்பட்டோம். முறையான உறைவிடமும், உணவும் அளிக்கப்படாமல், மருத்துவமனை வார்டுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளோம்.
மருத்துவத் துறையினரின் இந்த நடவடிக்கைகளால் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியிருக்கும் எங்களுக்குப் பணி நிரந்தரத்துடன் வேலை வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.