சென்னை:பொதுக்குழு படிவத்தில் தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் பெயர் இல்லாததை உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட உள்ளோம் என ஓபிஎஸ் தரப்பு அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று (பிப்.5) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் அவரது தரப்பின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதுபடி பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்யவில்லை. சட்டவிரோதமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அவரே ஒரு வேட்பாளரை முன்மொழிந்து அவரை ஏற்கிறீர்களா? இல்லையா? என்று பொது வாக்கு நடத்துகிறார்.
இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானது. இந்த சட்டவிரோதமான செயல்பாடுகளில் எங்களை ஈடுபடுத்திக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. இது குறித்து வழக்கறிஞர்களை கலந்து கொண்டு உச்ச நீதிமன்றம் அல்லது தேர்தல் ஆணையத்தில் முறையிட உள்ளோம்.
இறுதியாக இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை ஆதரிப்போம். எங்கள் தரப்பில் செந்தில் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இன்னும் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவே தாக்கல் செய்யவில்லை. அவர் பெயர் இடம்பெற்றுள்ள கடிதத்தை அனுப்பியுள்ளனர். ஒருவேளை தென்னரசு, நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினால் என்ன செய்வது?. கால அவகாசத்தைப் பற்றி கவலையில்லை. இதை நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் தெரிவிக்க வேண்டியது எங்களுடைய கடமை" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக பிரமுகர் நக்சலைட்டுகளால் வெட்டிக் கொலை - குடும்பத்தினர் கண்முன்னே நடந்த கோரம்!