சென்னை:உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங் (39). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் பகுதியில் தங்கி தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தார்.
கடந்த 4 ஆம் தேதி அமர்சிங் ரோட்டரி நகர் பிரதான சாலையில் உள்ள 7வது தெரு சந்திப்பில் பானிபூரி வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வந்து அமர் சிங்கிடம் பானிபூரி வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றார். இதனால் அந்த நபரிடம் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு அமர் சிங் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து அமர் சிங்-ஐ நோக்கி அடித்துவிட்டு அங்கிருந்து சென்றார். கல்லால் அடித்ததில் அமர் சிஙின் அடிவயிற்றில் உள்காயம் ஏற்பட்டது. பின் வியாபாரத்தை முடித்து வீட்டிற்கு சென்ற அமர் சிங்-க்கு வயிற்று வலி ஏற்பட்டதால் கடந்த 5 ஆம் தேதி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச சென்று பரிசோதனை மேற்கொண்டார்.
அப்போது அவரது மண்ணீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். பின்னர் அமர் சிங்-க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்நோயாளியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.