சென்னை: அண்ணா சாலையில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமான பால்ஸ் ரெஸ்டாரன்ட் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்த ரெஸ்டாரன்ட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சார நடனங்கள் இரவு 7 மணி முதல் 11.45 மணிவரை மூன்று காட்சிகளாக நடத்தப்பட்டு வந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பால்ஸ் ரெஸ்டாரன்டில் கலாச்சார நடனம் நடத்துவதாகக் கூறி நள்ளிரவில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாகவும், தனியார் ரெஸ்டாரன்ட்டின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு பால்ஸ் ரெஸ்டாரன்ட் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தனியார் ரெஸ்டாரன்ட் உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உரிமமின்றி கலாச்சார நடனத்தையும், சட்டவிரோதமாக நள்ளிரவு நேரங்களில் அங்கு ஆபாச நடனமும் வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர்.