சென்னை: மிக்ஜாம் புயல் தாக்குதல் தலை நகரைத் திண்டாட வைத்து விட்டது. புயல் கடந்து சென்ற நிலையில் மக்களும் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். இந்த இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புகள் மனிதர்கள் மட்டுமல்ல இயற்கை வளங்களையும் விட்டு வைக்கவில்லை.
அப்படி இந்த மிக்ஜாம் புயலில் சிக்கித் தான் காத்து வந்த மிச்ச சொச்ச இயற்கை அழகையும் இழக்கும் நிலையை அடைந்துள்ளது பள்ளிக்கரணை சதுப்புநில பகுதி. நகரமயமாதல் என்னும் கொடிய கரங்களின் பிடியிலிருந்து தப்பி மிதமிஞ்சி இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியானது 700 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. இது 176 வகையான பறவை இனங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வனங்கள், 50 வகையான மீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்விடமாகவும், 459 வகையான தாவர இனங்களையும் கொண்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பின்படி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இந்த சதுப்புநிலப் பகுதியில் கண்டறியப்படுவதாக சமூக ஆர்வலர்களின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் (Michaung) புயலால் சென்னை பெரிது பாதிக்கப்பட்டது.
குறிப்பாக பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆதம்பாக்கம் பகுதிகள் மிகவும் பாதிப்படைந்தது. இந்நிலையில், அந்த பகுதியில், தொடர்ந்து பணிகள் நடைபெற்று மக்களின் வாழ்க்கை இயல்பை நோக்கித் திரும்பினாலும் பறவைகளின் வாழ்விடமான சதுப்புநிலம் தன் நிலைக்குத் திரும்பாமல் தான் உள்ளது.
வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி வடிகால்களிலிருந்து வடியும் மழைநீர், மற்றும் வெள்ள நீரானது வீராங்கால் ஓடை வழியாகச் செல்லும் போது நெகிழி, மற்றும் வீட்டு உபயோக குப்பைகளைச் சுமந்து செல்கிறது. இதனால் அந்த சதுப்புநிலத்தில் இருக்கும் பறவைகளின் வாழ்க்கையானது பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலரான வெற்றிச்செல்வன் கூறுகையில், “தற்போது சதுப்புநிலம் சார்ந்த பகுதிகளில், கால்வாய்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது. ஏனென்றால், அது அங்கு இருக்கும் சுற்றுச்சுழலுக்கு மிகவும் ஆபத்தானது.
மேலும், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சென்னையில் தற்போது ஏற்பட்ட பாதிப்புகளை மனதில் கொண்டு, பள்ளிக்கரணையை ஆக்கிரமித்துள்ள பெரிய கட்டிடங்களை அகற்றினால் தான் தென் சென்னையைக் காப்பாற்ற முடியுமெனில் அதைச் செய்யவேண்டும்.