மடிப்பாக்கம் பள்ளிக்கரணை பகுதிகளில் வெளியேராத வெள்ள நீர் சென்னை:பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வெளியேறாததால் வெறிச்சோடி காணப்படுவதோடு, தேங்கியுள்ள தண்ணீரில் அதிக அளவில் கொசுக்களும் உற்பத்தியாகத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மிக்ஜாம் புயல் தமிழக வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மழை நின்று 3 நாட்களாகியும் இன்னும் பல பகுதிகளில் நீர் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்கிடக் கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!
பால், மின்சாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய மக்கள் போராடி வருகின்றனர். மேலும், 700 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு, வெள்ள நிவாரணக் குழுவினர் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
குறிப்பாக, பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஜெருசலேம் பொறியியல் கல்லூரி முழுவதுமாக தண்ணீரால் மூழ்கியுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும், மடிப்பாக்கம் பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக மழை நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால், டெங்கு போன்ற நோய் தொற்றுக்கள் பரவலாம் என மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: ராஜாங்குப்பம் பகுதியில் வெள்ள நீரில் போராடும் வட மாநிலத் தொழிலாளர்கள்!