சென்னை: சட்டப்பேரவையில் வனத்துறை மீதான மானியக் கோரிக்கையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மதிவேந்தன், வனத்துறை சார்பில் 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர், ’’திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டம் மனோராவில் ரூ.15 கோடியில் கடற் பசு பாதுகாப்பு மையம், ரூ.20 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ரூ.9.30 கோடி செலவில், ராம்சார் தளம் - வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். ராம்சார் தளம் - கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் செய்யப்படும். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.3.70 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரியலூர் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்" என்றார்.