கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அலுவலகங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் ஆகியவை மூடப்பட்டன.
இந்நிலையில், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கில் செய்யப்பட்ட தளர்வுகளினால் பேருந்து, ரயில், மக்கள் கூடும் இடங்களுக்கான தடைகள் நீக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை புறநகர் பகுதியான பல்லாவரம், வார சந்தையானது இன்று(செப்.11) முதல் மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சந்தையில் அனைத்து விதமான பொருள்களும் கிடைக்கும் என்பதால் மக்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.
மேலும், சந்தைக்கு வருபவர்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும், முகக்கவசம் அணியவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வபோது சந்தை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டும் வருகிறது.
ஐந்து மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் சந்தை திறப்பு இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “ஐந்து மாதங்களுக்கு பிறகு பல்லாவரம் வார சந்தை திறக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா அச்சத்தால் மக்களின் கூட்டம் குறைவாக உள்ளது.
இதனால் வியாபாரம் மந்த நிலையிலேயே இருக்கிறது. அதிகப்படியான மக்களுக்கு தற்போது சந்தை திறந்திருப்பது தெரியவில்லை,இன்னும் ஓரிரு வாரங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மக்கள் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகள், 7 தமிழர்களை விடுதலை செய்க!