சென்னை: ஓவியர் மனோகர் தேவதாஸ் (86), 1936 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி மதுரையில் மருத்துவரான ஹாரி ஜேசுதாசன் மற்றும் மாசிலாமணி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். 1953 ஆம் ஆண்டு கலை மற்றும் வேதியியலில் சிறந்து விளங்கியவர் சென்னையில் உள்ள சேத்துப்பட்டு உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை கல்வி முடித்தார். தனது 12வது வயதில் கண் பார்வை படிப்படியாகக் குறைந்து வருவதை அவர் உணர்ந்தார். அதன் விளைவாக இவருக்கு 32வது வயதில் கண் குறைபாடு நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
தேவதாஸ் ஆறாம் வகுப்பு படிக்கும் போது தீவிரமாக ஓவியம் வரையத் தொடங்கினார். மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் 1957 ஆம் ஆண்டு வேதியியலில் இளங்கலை முடித்தார். இவரது தந்தை மாரடைப்பால் மறைந்ததை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றினார். பின்னர் சென்னையில் உள்ள பேட்டரிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். பேட்டரி உற்பத்தியில் சிறந்து விளங்கிய இவர், இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரானார். அமெரிக்காவில் 1972-ல் தனது முதுகலை பட்டப்படிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்பினார்.
மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுயமாக கற்றுக் கொண்ட ஓவியக்கலையைப் பயன்படுத்திப் பல ஓவியங்களை வரைந்து உள்ளார். இந்த ஓவியங்களின் விற்பனை வருமானத்தை தொண்டுக்காக செலவு செய்தார். சிறுவயதிலேயே தனக்கு கண் குறைபாடு இருந்ததால் சங்கர நேத்ராலியா மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை ஆகிய விருது பெற்ற ஆராய்ச்சி மருத்துவமனைக்கு ஆதரவாக உதவினார். இந்த இரண்டு மருத்துவமனைகளும் தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் கொண்ட நோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை வழங்குகின்றன.
1997-ஆம் ஆண்டு பேட்டரிகள் உற்பத்தி செய்யப்படும் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு சொந்தமாக தொடங்கிய பேட்டரிகள் தொழிற்சாலையை 2000 ஆம் ஆண்டு லாபத்திற்கு விற்றார். இதனை தொடர்ந்து அவர் பல புத்தகங்களை எழுத தொடங்கினார். இவர் எழுதிய 8 புத்தகங்கள் 2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2020ஆம் ஆண்டில், தொண்டு மற்றும் கலையில், அவர் செய்த பணிக்காக இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை பெற்றார். இவர் ஓவியக் கலையில் ஆர்வத்துடன் விளங்குவதற்கு மனைவி மகிமா உறுதுணையாக இருந்திருக்கிறார்.
ஏனென்றால் இவரது மனைவி மகிமா முறையாக ஓவியம் படித்த ஒரு சிறந்த கலைஞராக இருந்துள்ளார். 1972 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் வழியில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இவரது மனைவி மகிமாவின் கழுத்துக்கு கீழ் உள்ள பாகங்கள் முடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு புறம் மனோகர் தேவதாசின் கண் வேகமாக செயல் இழக்கத் தொடங்கியது. இருந்த போதிலும் ஓய்வு நேரத்தில் ஓவியத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் ஓவியர் மற்றும் புகைப்படக் கலைஞராக தனக்கென ஒரு பெயரை அவரால் உருவாக்க முடிந்தது.