சென்னை: www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய வலைதளங்களின் மூலம் நெல் நேரடி கொள்முதல் செய்யப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நெல் பயிரிடும் உழவர் பெருமக்கள் பயனடையும் வகையில் உணவு பாதுகாப்பு துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் உரிய அனுமதி பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினால் அந்தந்த மாவட்டங்களில் ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒன்றிய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத்துறை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் உழவர் பெருமக்கள் பயன் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இணைய வழி பதிவு முறையை 01.10.2021 முதல் செயல்படுத்த கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில் உழவர் பெருமக்கள் 2021-22 காரீப் சந்தைப் பருவம் துவங்கும் 01.10.2021 முதல் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் www.tncsc.tn.gov.in மற்றும் www.tncsc-edpc.in ஆகிய வலைதளங்களில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய நாளினைத் தெரிவித்து முன்பதிவு செய்து, நெல்லை விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறுவை பருவ நெல் அறுவடையானது 01.10.2021 தேதிக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு, நெல்வரத்து இருந்து வரும் சூழ்நிலையில் 01.10.2021 முதல் இணைய வழியில் (Online) பதிவு செய்து நெல்விற்பனை செய்வதற்குப் பதில் ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று உழவர் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.