சென்னை:புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவர்களும் மாநில கல்லூரியில் (Presidency College) சேர விண்ணப்பித்து லேட் அட்மிஷன் பெற நேற்று (ஆகஸ்ட். 11) பூங்கா ரயில் நிலையம் அருகே வந்து உள்ளனர்.
அப்போது அங்கு அமர்ந்திருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், தாங்களும் மாநில கல்லூரி மாணவர்கள் தான் என்று கூறி பேச்சு கொடுத்து உள்ளனர். அவர்களுடன் பேசியதில் அந்த இரு மாணவர்களும் மாநில கல்லூரியில் சீட் வாங்க செல்வதை தெரிந்து கொண்டனர். பின்னர் அவர்களை பூங்கா ரயில் நிலையம் பகுதியில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருப்பதாகவும், அவர்கள் உங்களை தாக்குவார்கள், அங்கு செல்ல வேண்டாம் எனக்கூறி, பெரியமேடு மைலேடிஸ் பூங்கா அருகே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்று கூறி, அம்மாணவர்களை மாநில கல்லூரியில் சேர்ந்தால் வெட்டுவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த மாணவர்களை தாக்கி, பச்சையப்பன் கல்லூரிக்கு ஜே எனக் கூறி அதை வீடியோவாக பதிவு செய்து, அந்த மாணவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: சின்னத்துரைக்கு என்ன நடந்தது? தாய் அம்பிகாவதி கண்ணீர் மல்க பேட்டி !
இதனால் அச்சமடைந்த இரு மாணவர்களும், இச்சம்பவம் குறித்து பெரியமேடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் பேரில் பெரியமேடு போலீசார், மாணவர்களை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவனை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவன் மீது, கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மற்ற மாணவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்லூரிகளுக்கு மத்தியில் நடக்கும் இத்தகைய சம்பவங்களுக்கு தீர்வென்பதே இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக தற்போது நாங்குநேரியில் பள்ளி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் இந்த கொலை மிரட்டல் சம்பவம் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் கடந்த ஜனவரி மாதம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினர் தங்களுக்குள் மோதிக் கொண்டது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவின. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவம்; தைரியமாக இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்- முதல்வர் ஸ்டாலின்!