சென்னை:கவிஞரும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநருமான விடுதலை சிகப்பி என்பவர் மீது கலகத்தைத் தூண்டுதல், எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் செயல்படுதல், எந்த ஒரு பிரிவினருக்கும் அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அபிராமபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், ''கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்த இலக்கிய நிகழ்வில் 'மலக்குழி மரணம்' எனும் தலைப்பில் கவிஞர் விடுதலை சிகப்பி எனும் விக்னேஸ்வரன் கவிதை ஒன்றை வாசித்திருந்தார்.
அக்கவிதை, நாடு முழுக்கத் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் மலக்குழி மரணங்கள் குறித்த அக்கறையை வெளிப்படுத்துவதாகும். அத்தகைய மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதற்காக, சாதாரண மனிதர்களுக்குப் பதில் கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள், அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் அந்தக் கவிதை இருந்தது.
எழுத்தாளரின் படைப்புச் சுதந்திரம் அது. மற்றபடி எந்த நம்பிக்கையையும் திட்டமிட்டு இழிவாக எழுதுவதோ, பேசுவதோ கவிதையின் நோக்கம் அல்ல. அப்படி இருக்கும்போது, பிறப்பால் இந்து ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவரான விடுதலை சிகப்பி என்ற விக்னேஸ்வரனை 'வேற்று மதத்தைச் சேர்ந்தவன் இந்து மதத்தைப் பழிக்கிறான்' என்ற பொய் பிரசாரத்தை இணையத்தில் சில குழுக்கள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து செய்து வந்ததன் தொடர்ச்சியாக, விடுதலை சிகப்பி என்ற விக்னேஸ்வரன் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.