சென்னை:தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாட்டில் திமுக எம்பிக்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மே 24ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் கடந்த மே 27-ம் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திமுகவுக்கான 4 இடங்களில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் போட்டியிட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நாளை(மே 30) வேட்புமனு தாக்கலும் செய்யவிருக்கிறார்.
இதையும் படிங்க: ஆதார் தகவல்களை பகிர வேண்டாம்; சுற்றறிக்கையை திரும்ப பெற்ற மத்திய அரசு