தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தடுப்பூசி உற்பத்தி பிரிவுகளை மீண்டும் திறக்க வில்சன் எம்பி கோரிக்கை! - dmk mp wilson

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரிக்க, அனைவருக்கும் எளிதாக தடுப்பூசி கிடைக்க ஏதுவாக தமிழ்நாட்டில் உள்ள மூன்று தடுப்பூசி உற்பத்தி பிரிவுகளை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.

P Wilson MP Letter to HM Harshavardhan -
தடுப்பூசி உற்பத்தி பிரிவுகளை மீண்டும் திறக்க வில்சன் எம்பி கோரிக்கை!

By

Published : May 14, 2021, 10:52 PM IST

சென்னை:அவர் எழுதியுள்ள கடிதத்தில், "சென்னையில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்ட்டியூட் ஆகிய மூன்று இடங்களிலும் அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்க உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளதால் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்கவேண்டும்.

கடந்த 2012ஆம் ஆண்டு 594 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகமானது ஏறக்குறைய இன்றுவரை பயன்பாட்டுக்கு வராத நிலையில், அனுமதிக்கப்பட்ட 408 பணியிடங்களில், 251 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட் வளாகமானது இந்தியாவின் தொன்மையான தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று.

இந்த மையங்களை பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றத்திலும், ட்விட்டர் தளம் வாயிலாகவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். இத்தகைய தடுப்பு மருந்துகளை தயாரிப்பதற்கான போதிய தொழில்நுட்ப வசதிகள் இந்த மையங்களில் இல்லை எனவும், அதேபோல் இரண்டுமுறை டெண்டர் கோரப்பட்டும் செங்கல்பட்டில் உல்ள தடுப்பு மருந்து ஆலையை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும், கடந்த பத்தாம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த மூன்று மையங்களையும் பயன்படுத்திட இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது ஏற்கெனவே இந்த தடுப்பு மருந்துகளுக்கான காப்புரிமை பெற்று தடுப்பூசி தயாரிப்பில் உள்ள சீரம் நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு இத்தகைய தடுப்பு மருந்து தயாரிப்பு மையங்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி தடுப்பூசிகளை தயாரிக்கலாம்.

இரண்டாவதாக, 1970ஆம் ஆண்டு பிரிவு 92 இந்திய காப்புரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி. கரோனா தடுப்பு மருந்திற்கான காப்புரிமையை மத்திய அரசே வழங்கி மூன்று மையங்களிலும் தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்க முடியும். எனவே, இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மூன்று இடங்களிலும் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம்: தேமுதிக அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details