சென்னை:கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து பெங்களூரு தெற்கு தொகுதியின் எம்பி தேஜஸ்வி சூர்யா பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், திமுகவை தாக்கி சில கருத்துகளைத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலிருந்து பெரியாரிசத்தை முற்றிலும் அகற்றுவோம் எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இது பெரியார் ஆதரவாளர்களையும், திக, திமுக உள்ளிட்ட திராவிடக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் அனைத்தையும் கோபமுறச் செய்தது. பலரும் தேஜஸ்வியின் கருத்திற்கு எதிராகவும், பாஜகவின் கொள்கைக்கு எதிராகவும் பல விமர்சனங்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
ஆனால், திராவிடக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அதிமுக, தேஜஸ்வியின் இக்கருத்திற்கு எவ்வித கண்டனத்தையோ, மறுப்பையோ தெரிவிக்கவில்லை. இது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் தேஜஸ்வியின் கருத்து குறித்தும், அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும் கண்டனம் தெரிவித்து, அதிமுகவின் கொள்கை குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளார்.
‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்
ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் பெரியாரிசத்தை (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.
தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்
தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சமுதாய விடுதலை, சமூக நீதியை பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர்.
தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அவர்கள் தலைமையிலான கட்சியும் ஏற்றுக் கொண்டுவிட்டார்களா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.