தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், ப.சிதம்பரம் எம்.பி, கனிமொழி எம்.பி, திருமாவளவன் எம்.பி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது, ப.சிதம்பரம் பேசுகையில், ‘72 மணி நேரத்தில் முக்கியமான ஒரு சட்டத்தை திருத்தம் செய்துள்ளார்கள் என்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்த 15 நாள்களில் இப்படி ஒரு புரட்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு சொந்தம் கொண்டாடவேண்டியது அரசியல் கட்சிகள் அல்ல. மாணவர்களும், இளைஞர்களும் தான்.
உயிரிழப்புகள் ஏற்பட்டும் கூட அவர்கள் அஞ்சவில்லை. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களை ஜாதி, மதம், இனம் என பிரித்துவிட்டனர். ஆனால் அவற்றை மறந்து தெருக்களில் 15 நாள்களில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். அரசியல் சாசன நெறிகளைக் காக்க போராடும் நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. இஸ்லாமியர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் அல்ல. அப்படி சித்தரிக்க முயல்கின்றனர்.
இது இந்தியாவில் வாழும் மக்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜெர்மனில் நடந்ததை போல் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட சரித்திரம் திரும்புகிறதோ என்று தோன்றுகிறது. நாசி ஜெர்மனியில் நடந்ததை இங்கே செயல்படுத்த உள்ளனர். 31.12.2014 வரை இந்தியாவிற்கு வந்தவர்களுக்குத் தான் இச்சட்டம் என்கிறது அரசு. உலகில் துன்புறுத்தப்படும் சிறுபான்மை என சொன்னால் பொலிவியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ளனர். இந்துக்கள் அனுமதிப்பார்கள். ஆனால் இலங்கை தமிழ் இந்துக்கள் அனுமதிக்க மாட்டோம் என்கின்றனர்.
நாடாளுமன்றத்தில் 125 உறுப்பினர்களும் இச்சட்டம் செல்லுமா செல்லாதா எனச் சொல்ல வாய் திறக்கவில்லை. நான் கேட்ட கேள்விகளுக்கு உள்துறை அமைச்சர் பதில் கொடுக்கிறார். ஆறு மாதம் ஒருவர் ஒரு இடத்தில் இருந்தால் அவர் சென்செஸ் கணக்கில் வருவார். அனால், 21 இனங்கள் அதில் வருகிறது, ஆறு கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளது.
கடைசி முகவரி என்ன..? தாய் தந்தை யார்..? உள்ளிட்ட கேள்விகள் சென்செஸ் கணக்கில் சேர்க்க காரணம் என்ன..! பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் பேச்சுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மீதமுள்ள ஆண்டுகள் இவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்’ என்றார்.