ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் நேற்று சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வைத்து மத்திய அரசு சிதம்பரத்தை பழிவாங்குவதாகவும், சர்வாதிகார நடவடிக்கைகள் மூலம் ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிதம்பரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் என்பதாலும் அவரது கைது நடவடிக்கை மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினரை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில், இன்று மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட தலைநகர் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரத்தை விடுதலை செய்ய வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் மாநகர பொருளாளர் பாஸ்கர் தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்காத நிலையில் கட்சியினர் சிறிது நேரம் கோஷமிட்டு கலைந்து சென்றனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொண்டாமுத்தூர் எம்எல்ஏ கந்தசாமி, மாநில துணை தலைவர் வீனஸ் மணி, கணபதி சிவக்குமார், மாவட்ட பொருளாளர் சவுந்தரகுமார் உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியினர், மத்தியில் ஆளும் பாஜக அரசு சர்வாதிகாரப் போக்குடன் ஹிட்லர் ராஜ்ஜியத்தை போன்ற ஒரு அரசாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.