தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமைப்படுத்துதலில் இருந்து தப்பிக்க வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் புதிய யுக்தி! - Self Isolation

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் பயணிகள், 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் இருந்து தப்பிப்பதற்காக வரும் வழியிலேயே அண்டை மாநிலங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்கள் மூலம் சென்னை வருகின்றனர்.

Overseas Travellers following a New Tactics to escape from Isolation
Overseas Travellers following a New Tactics to escape from Isolation

By

Published : Aug 24, 2020, 1:04 PM IST

Updated : Aug 24, 2020, 1:30 PM IST

கரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்கள் மீட்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனா். அவா்கள் அனைவரையும் விமான நிலையங்களில் மருத்துவப் பரிசோதணை செய்து 14 நாள்கள் அரசே தனிமைப்படுத்தும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த நடைமுறை கடந்த மே மாத இறுதியிலிருந்து இந்தியாவில் உள்ள அனைத்து சா்வதேச விமான நிலையங்களிலும் அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையே இந்த நடைமுறையில் மத்திய சுகாதாரத்துறை ஆகஸ்ட் 8ஆம் தேதியிலிருந்து சில தளா்வுகளை அறிவித்தது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்களில் வரும் இந்தியா்கள், பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு, கரோனா மருத்துவப் பரிசோதனைசெய்து, நோய்த்தொற்று இல்லை என்ற மருத்துவச் சான்றிதழ்களுடன் வருபவா்களுக்கு அரசின் தனிமைப்படுத்துதல் தேவையில்லை.

ஆனால், அவா்கள் தங்களின் வீடுகளில் 14 நாள்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைப்போல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் வருபவா்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்திக் கொள்ளலாம். மற்றவர்கள் 7 நாள்கள் மட்டும் அரசின் தனிமைப்படுத்துதலுக்கும் மீதிமுள்ள 7 நாள்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையை இந்தியாவில் உள்ள அனைத்து சா்வதேச விமானநிலையங்களும் செயல்படுத்த தொடங்கிவிட்டன.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மட்டும் சுகாதாரத் துறையினா் மத்திய அரசின் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த மறுக்கின்றனா். பழைய முறைப்படியே மருத்துவப் பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல் ஆகிய நடைமுறைகள் நடந்து வருகிறது.

இதுபற்றி அலுவலர்களிடம் கேட்டால் மத்திய சுகாதாரத் துறை அதைப்போன்ற தளா்வுகளை அறிவித்து, அதை அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் இந்த நேரத்தில் இந்த தளா்வுகளை அனுமதிக்க முடியாது. எனவே, நாங்கள் ஏற்கெனவே உள்ள முறையை செயல்படுத்துகிறோம். அதே நேரத்தில் 7 நாள்கள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும், நோய்த்தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானவா்களை மீதி 7 நாள்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறோம் என்று கூறுகின்றனா்.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து மீட்பு விமானங்களில் வரும் பயணிகள், 96 மணி நேர மருத்துவச் சான்றிதழ்களுடன் வந்து, நாங்கள் அரசின் தனிமைப்படுத்துதலுக்குச் செல்லமாட்டோம். வீடுகளில் தான் எங்களை தனிமைப்படுத்திக் கொள்வோம் என்று வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனா்.

சில நேரங்களில் பயணிகள் அனைவரும் சோ்ந்து விமானநிலையத்தில் போராட்டங்களையும் நடத்துகின்றனா். ஆனால், இறுதியாக அரசின் தனிமைப்படுத்துதலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இதனால், தற்போது வெளிநாடுகளிலிருந்து 96 மணி நேர மருத்துவச் சான்றிதழ்களுடன் வரும் பயணிகள் சென்னை சா்வதேச விமான நிலையம் வருவதைத் தவிா்க்கின்றனா். வெளிநாடுகளிலிருந்து வரும் பல மீட்பு விமானங்கள் டெல்லி, ஹைதராபாத், விஜயவாடா, கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்கள் வழியாகவே சென்னை வருகின்றன. இதனால் வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகள் நேரடியாக வராமல், அங்கே இறங்கி விடுகின்றனா்.

அதன்பின்பு அங்கிருந்து உள்நாட்டு விமானங்கள் அல்லது சாலை மாா்க்கமாக சென்னை வருகின்றனா். சென்னைக்கு உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் கரோனா பரிசோதனையோ, அரசின் 14 நாள்கள் தனிமைப்படுத்துதலோ கிடையாது. இதனால் பயணிகள் வீடுகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, மீட்பு விமானங்களில் சென்னை வரும் பயணிகள் இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.

இந்நிலையில் அபுதாபியிலிருந்து விஜயவாடா வழியாக சென்னைக்கு வந்த ஏா் இந்தியா மீட்பு விமானத்தில் 110 இந்தியா்கள் வருவதாக இருந்தது. ஆனால், அனைத்துப் பயணிகளும் விஜயவாடாவிலேயே இறங்கிவிட்டனா். இதனால் விஜயவாடாவிலிருந்து அந்த விமானம் காலியாகவே சென்னை வந்தது. இதைப்போல் துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் வந்த 125 பேரில் 24 போ் மட்டுமே சென்னை வந்தனா். 101 போ் விஜயவாடாவில் இறங்கிவிட்டனா். மேலும் ஜப்பான் டோக்கியோவிலிருந்து மீட்பு விமானத்தில் வந்தவா்களில் 100 போ் சென்னை வருவதாக இருந்தது. ஆனால், அவா்களில் 50 போ் மட்டுமே சென்னை வந்தனா். மீதி 50 போ் டெல்லியில் இறங்கிவிட்டனா்.

சென்னை வந்த ஏர் இந்தியா விமானம்

இதைப்போல் சென்னைக்கு வந்த 4 ஏா் இந்தியா மீட்பு விமானங்களில் வந்த 408 இந்தியா்களில், 139 போ் மட்டுமே சென்னை வந்து 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். மீதமுள்ள 269 போ் டெல்லி, விஜயவாடா விமான நிலையங்களில் இறங்கி விட்டனா். அவா்கள் உள்நாட்டு விமானங்களில் கொரோனா பரிசோதனைகள் இல்லாமல் சென்னைக்கு வரும்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:அதானியிடம் விமான நிலையங்களை ஒப்படைப்பதை எதிர்த்து வலுவடையும் போராட்டங்கள்!

Last Updated : Aug 24, 2020, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details