சென்னை: தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை காசநோய் குறித்த ஆய்வு மேற்கொண்டு, அது குறித்து வெளியிடப்பட்ட ஆய்விதழில் கூறியுள்ளதாவது, "உலகில் கரோனா தொற்றுக்குப் பின்னர் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தற்கு காசநோயும் காரணமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் ஆய்வின்படி, ஒவ்வொரு ஆண்டும் 10.6 மில்லியன் பேர் காசநோயால் (டிபி) பாதிக்கப்படுகின்றனர்.
இந்த காச நோய் வராமல் தடுக்க முடியும். நோய் தொற்று வந்தாலும், குணப்படுத்தக்கூடிய நோயாக இருக்கிறறது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் பேர் பாதிப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். மனிதனின் இயற்கை வாழ்க்கை முறையில் மாற்றம், உணவு பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றால் பல பாக்டீரியா தொற்று, வைரஸ் நோய்கள் உருவாகி வருகின்றன.
காச நோயை (tuberculosis) 1882ஆம் ஆண்டுதான் உலகில் முதன் முதலாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். நுரையீரல் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், தும்மும்போது காற்றில் பரவுகிறது. அந்த காச நோய் காற்றில் இருக்கும் போது, அதை சுவாசிக்கும் நபருக்கும் தொற்று பரவுகிறது. காசநோய் நுரையீரலில் ஆரம்பித்து, ஒட்டுமொத்த நரம்பு மண்டலத்தையும், இரைப்பை மற்றும் குடல் பகுதியையும் பாதிக்கும் தன்மையுடையது.
2022ஆம் ஆண்டில் மட்டும் 10.6 மில்லியன் பேர் இந்த காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் ஒரு லட்சம் பேரில், 196 பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டால், அதில் 126 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்தகைய கொடூரமான நோயை 2025ஆம் ஆண்டுக்குள் ஒழித்து, 'காச நோய் இல்லா இந்தியா'வை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அந்த இலக்கை அடைய, அனைத்து மாநிலங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காசநோய் ஆரம்ப கட்டத்தில் நுரையீரலை மட்டும் பாதிக்கும். காய்ச்சல், நெஞ்சு வலி, இருமும்போது சளியுடன் ரத்தம் வெளிவருதல், தொடர்ச்சியான இருமல் பிரச்சினை, தொடர்ந்து சோர்வாக இருத்தல், பசியின்மை, இரவு நேரங்களில் அதிகப்படியான வியர்வை வெளியேறுதல், திடீர் எடை குறைவு போன்றவை காசநோய்க்கான அடிப்படை அறிகுறிகள்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் காசநோய் கண்டறிவதற்கான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டும் திட்டத்தை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் கண்டறிவதற்குரிய பரிசோதனைகள், சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளும் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து, மருந்துகள் முதுலுதவிகளும் கிடைக்கும் வகையில் ‘வாக் இன் சென்டர் - ஒன் ஸ்டாப் டிபி சொலுஷன்’ ( Walk-in Centre- One Stop TB solution ) என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.