சென்னைமாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டன. அதில் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் சேவையாக, சென்னை சென்டரல் முதல் பரங்கி மலை வரை மற்றும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட பாதை என இரண்டு வழிகளிலும் இயக்கபட்டு வருகிறது.
மேலும் இந்த வழித்தடங்களில், தினமும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிப்பதால், பயண நேரம் குறைவதோடு, வசதியாக பயணிக்க முடியும் என்பதாலும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் மெட்ரோ ரயில்களில் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 9 மாதங்களில் மட்டும் சென்னை மெட்ரோ ரயில்களை பயன்படுத்தி 6 கோடிய 66 லட்சம் பயணிகள் பயணித்து உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஒன்பது மாதங்களில் கோடிக்கணக்கான பயணிகள்:அந்த வகையில்,நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும் சென்று உள்ளனர்.
அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும், மே மாதத்தில் 72 லட்சத்து 68 ஆயிரத்து 7 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பயணிகளும் பயணித்து உள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பயணிகளும், செப்டம்பர் மாதத்தில் 84 லட்சத்து 37 ஆயிரத்து 182 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதிகபட்சமாக கடந்த செம்டம்பர் 15ஆம் தேதி அன்று மட்டும் 3 லட்சத்து 37 ஆயிரத்து 586 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.