சென்னை:நீர்வளத்துறை மானிய கோரிக்கையின் மீது இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. அப்போது பேசிய வேதாரண்யம் சட்டப்பேரவை உறுப்பினர் ஓ.எஸ். மணியன், " வேதாரண்யம் பகுதியில் 450 ஏக்கர் பரப்பளவில் மெகா புட் பார்க் அமைக்க அனுமதி வழங்கி மண் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து செயல்படுத்தவேண்டும். நாகை மாவட்டம் முழுவதும் காவிரி பாயும் பகுதி. ஆனால், தற்போது வடிகால்தான் ஓடுகிறதே ஒழிய காவிரி ஆறு ஓடவில்லை.
தண்ணீர் சிக்கனத்துக்கு விழிப்புணர்வு இயக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜெயலலிதா நீர்வளத்தை பாதுகாப்பதற்காக மழைநீர் சேகரிப்பு, பண்ணைக்குட்டை என பல திட்டங்களை ஏற்படுத்தினார். டீசல் என்ஜின் விவசாயிகளுக்கு 50 விழுக்காடு டீசல் மானியம் வழங்க வேண்டும்.
மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு வடிநில மாநிலமாக அமையப் பெற்றுவிட்டது. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர். ஜெயலலிதாவின் தொடர் சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு, கடந்த ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அரசிதழில் வெளியிட செய்தார்.