இது தொடர்பாக தேசிய தகுதித் தேர்வு முகமை வெளியிட்டுள்ள தகவலின் படி, "இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதுவதற்கு 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக 3 ஆயிரத்து 842 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரத்து 914 மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 240 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளனர்.
கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி செப்டம்பர் 13ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வர்களின் வசதிக்காக கூடுதலாக தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் தகுந்த இடைவெளி விட்டு அமர வைக்கும் வகையில் தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி, சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், கரூர், திருவள்ளுர், பண்ருட்டி, கடலூர், நெய்வேலி, விருத்தாச்சலம், நாமக்கல், காஞ்சிபுரம், வேலூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டில் அவர்களுக்கான வழிமுறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையத்திற்கு மாணவர்கள் காலை 11.40 மணி முதல் மதியம் 1.30 மணி வரையில் அனுமதிக்கப்படுவார்கள். மதியம் 2 மணி முதல் 5 மணி வரையில் தேர்வு நடைபெறும். மாணவர்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை படித்தேன் எனவும், தனக்கு கடந்த 14 நாட்களாக இருமல், மூச்சுத்திணறல், தொண்டை வலி, சளி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இல்லை என்பதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.