சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கோ, மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கோ கரோனாவின் தாக்கம் தெரியாதா? எல்லாம் தெரிந்திருந்தும் குருடனாகவும், செவிடனாகவும் இருப்பது ஏன் என சாமானியர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு, பல தரப்பு மக்கள் மூச்சுத் திணறலால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்தக் காட்சிகளைப் பார்த்து கொதித்தெழுந்த ஒரு சாமானிய மனிதன் எழுதிய மரண வாக்குமூலம் இது!
'மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்கவில்லை
நாடெங்கும் மரண ஓலம்.
மயானத்தில் கூட இடமில்லை; வாழ்ந்தாரை வழியனுப்ப வழியில்லை.
அரசாங்கம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசு மருத்துவமனைகள்,
தனியார் மருத்துவமனைகள் கைவிட்டோரையும் தாங்கிப் பிடித்து,
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இவை எதுவும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கோ
மிகப்பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கோ தெரியாதா?
இவர்கள் விழியிருந்தும் பார்க்காதவர்களாய், செவியிருந்தும் கேட்காதவர்களாய்,
வாயிருந்தும் பேசாதவர்களாய் இருப்பது ஏனோ?
இவர்களால் கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்த இயலாதா?
ஆக்ஸிஜன் செறிவூட்டிகளையும், ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் இவர்களால் தருவிக்க இயலாதா?
அருகாமையில் உள்ள ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து
தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க இந்த மெத்தப் படித்தவர்களால் முடியாதா?
பரந்து விரிந்த இவர்கள் மருத்துவக்கல்லூரிக் கட்டடங்களில், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கக் கூடாதா?
இவர்களிடம் கொட்டிக் கிடக்கும் செல்வத்தின் ஒரு சிறு பகுதியைப் பயன்படுத்தி
ஆக்ஸிஜன் உற்பத்திக் கருவிகளையும், மையங்களையும் நிறுவ இவர்களால் இயலாதா?
வெளிநாடுகளில் படித்த / பணியாற்றிய பூமிப் பந்தெங்கும் பரந்து விரிந்துள்ள தொடர்புகளைக் கொண்ட இவர்களால் தரணியெங்கிருந்தும் உயிர் காக்கும் உபகரணங்களை வரவழைக்க முடியாதா?
மருத்துவர்களையும் செவிலியர்களையும் கூடுதலாக நியமித்து சிகிச்சை அளிக்க முடியாதா?
ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரையும், வேறு நோய் உள்ளவர்களையும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிட்டு, தாமாகவே நோய் குணமாவோரைக் குணப்படுத்த இவர்கள் எதற்கு?
கரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் போது ஆக்ஸிஜன் தீரப் போகிறது எனக் கூறி வெளியேற்றுவது எந்த ஊர் நியாயம்?
சாலையில் சாமானிய மனிதர்கள் சுவாசிக்கப் போராடும் போது,
செல்வம் படைத்தோருக்காகப் படுக்கைகளைப் பதுக்கி வைப்பது பாவச் செயலன்றி வேறென்ன?
இவர்கள் செல்வம் எங்கிருந்து வந்தது?
செல்வம் படைத்தோரிடமிருந்து வந்த பணத்திலிருந்தா இவர்கள் இந்த மாபெரும் மருத்துவமனைகளை அமைத்தார்கள்?
வாழ்நாள் சேமிப்பையெல்லாம் மருத்துவச் சிகிச்சைக்காகக் கரைத்த, நகைகளை விற்றுச் செலவு செய்த சாமானியர்களின் காசல்லவா இது?
அரசாங்க மருத்துவக் காப்பீட்டில் இருந்து வந்த பணமல்லவா இது?
தனியறைக்கு ஆசைப்பட்டுக் கொடுத்த செல்வமல்லவா இது?
எங்கிருந்து படித்தார்கள் இவர்கள்?
எங்கிருந்து வந்தார்கள் இவர்கள்?
சொல்லொண்ணாத் துயரிலிருக்கும் சொந்த நாட்டு மக்களுக்கு
இல்லை என்று சொல்வதற்கு இவர்களுக்கு எப்படித் தான் மனம் வருகிறது?
இல்லை என்று சொல்லும், அதற்கான தைரித்தையும் யார் கொடுத்தது?
என்ன தவறு செய்தாலும் காசை விட்டெறிந்தால் போதும் என்பதால் தான்
இவர்கள் இந்தியாவில் மருத்துவமனைகளை அமைத்துள்ளார்களோ?
இவர்களை தர்ம பரிபாலனம் செய்யவா நாம் அழைக்கிறோம்?
அரசு நிர்ணயித்த காசை வாங்கிக் கொண்டு தானே, உதவுங்கள் என்று கேட்கிறோம்?
கரோனாவால் மரணமடைந்தால் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
சிகிச்சை கிடைக்காமல் மூச்சுத் திணறி மரணிப்பதை அறிவார்ந்த யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியுமா?
கார்ப்பரேட் மருத்துவமனைகளே!
தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளே!
எங்கள் மீது சற்றேனும் இரக்கம் காட்டுங்கள்.
இல்லையேல், அரசே இவர்கள் மருத்துவமனைகளை எடுத்து நடத்துவதைத் தவிர வேறு வழி ஏதும் உண்டோ?
மக்களின் துயரை, மக்கள் மடிவதை வேடிக்கை பார்க்கும் நிறுவனங்கள் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?
மனிதர்களின் மனங்களைத் தோலுரித்துக் காட்டிய கரோனாவே நீ வாழ்க!
இதுகுறித்து தொற்று நோய் வல்லுநர்களிடம் கேட்டபோது, அந்த சாமானியர் தன் குரலை சரியாகவே ஒலித்திருக்கிறார்' என அந்த சாமானியர் கூறுகிறார்.