தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக வழக்கு:ஓபிஎஸ் தரப்பில் வரும் 24-ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவு - அதிமுக பொதுக்குழு வழக்கு

அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிராகவும், கட்சியின் பொதுச்செயலளார் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

admk case orders reserved
admk case orders reserved

By

Published : Mar 22, 2023, 9:18 PM IST

சென்னை:அதிமுக சார்பில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தடை கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் இன்று (மார்ச் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

'வாபஸ் பெற தயார்':மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுகவில் 1977முதல் உறுப்பினராக பன்னீர்செல்வம் உள்ளார். 2017 பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னீர்செல்வம் 2026 டிசம்பர் வரை பதவியில் தொடர உரிமை உள்ளது. 2022ல் நடந்த பொதுக்குழு அடிப்படை உறுப்பினர்கள் தலைமை பொறுப்புக்கு வருவதை தடுக்கும் வகையில் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது.

வங்கி கணக்குகள், உறுப்பினர்கள் நியமனம், புதிய திட்டங்கள், தேர்தலில் வேட்பாளர்களை போட்டியிட அனுமதிப்பது என அனைத்திலும் முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்க செயற்குழு அனுமதி அளித்துள்ளது.பொதுக்குழுவுக்கு அதிகாரமா? தலைமை கழகத்துக்கு அதிகாரமா? யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது என கட்சி விளக்கவில்லை. திமுகவுடன் இணைந்தும், திமுகவின் செயலை பாராட்டும் விதமாக செயல்பட்டதாலும், தனது சொந்த லாபத்திற்காக பல கோடிகள் செலவு செய்து செயல்படுவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, கட்சியின் நன்மைக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது சட்டவிரோதம். கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. திட்டமிட்டு ஒருவரின் நலனுக்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

கட்சிவிதி 5ன்படி, உறுப்பினர்களை நீக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன், கட்சியின் 2 பங்கு உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். சுய விளக்கம் கேட்க வேண்டும். முதலில் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீக்கம் செய்யலாம். அனைத்தும் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் 2026ல் முடியும் வரை இந்த அதிகாரம் தொடரும். இடையில் பதவியை கலைக்க முடியாது.

ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் முடிந்த பின் புதிய பதவிகள் ஏற்படுத்துவதை எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதற்காக முதலில் பன்னீர் செல்வம் நீக்கம், பின்னர், விதிகளில் புதிய திருத்தம் செய்து எடப்பாடிக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய விதிகள் நீக்கப்பட்டால், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடவும், வழக்கை வாபஸ் பெறவும் பன்னீர்செல்வம் தயாராக இருக்கிறார்" என வாதாடப்பட்டது.

'பொதுக்குழுவின் முடிவு இறுதியானது':பின்னர் அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பன்னீர்செல்வம் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம். பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது அவரின் சகோதரர் ராஜாவை எந்த விளக்கமும் அளிக்காமல் எந்த அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார் என காரணம் கூறவில்லை. பொதுக்குழுவின் முடிவு இறுதியானது. அதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான்.

2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று, பொதுக்குழுவை ஜூலை 11-ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கான முகாந்திரமும், போதுமான காரணங்களும் இருந்ததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டார். கட்சி உள் விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக அரசு நிறுவனம் கிடையாது. விதிகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது.

உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது விதிகளை மாற்றி, அமைக்க கட்சிக்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்ட பின், காலியிடம் ஏற்படாமல் இருக்கவும், கட்சியை வழிநடத்தவும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது. 1972-ல் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுகவில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017ல் விதிகள் மாற்றப்பட்டன.

அதன்படி, 2017-ல் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கப்பட்டு பொதுக்குழு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. 2022-ல் மீண்டும் முதன்மை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டது. இரண்டு தலைமைகளால், உடனடியான சரியான முடிவுகள் எடுக்க முடியவில்லை. அதனால் கட்சியை சரியாக வழிநடத்தவே ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டது" என வாதாடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு, பன்னீர்செல்வம் தரப்பில் வரும் 24-ம் தேதி எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சென்னையில் ‘டி.எம்.செளந்தரராஜன் சாலை’ - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details