சென்னை:2014ஆம் ஆண்டில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற அலுவலர் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு உத்தரவிட்டதை எதிர்த்து வழக்குத்தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், அரசு இல்லங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வரும் காவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், காவலர்களை ஆர்டர்லிகளாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி இந்த வழக்கு இன்று (ஜூலை 25) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில், ’உள்துறைச்செயலாளர் சார்பில், 2 வாரங்களில் சம்பந்தப்பட்ட ஆர்டர்லிகளை காவல்பணிக்குத் திரும்ப அனுப்ப வேண்டும் என அறிக்கை பிறப்பித்துள்ளார்.
உயர் அலுவலர்களுக்குத் தவிர்க்க முடியாத காரணங்களால் கூடுதல் ஓட்டுநர்கள் தேவை என்றால், சம்மந்தப்பட்ட டிஐஜி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்குப்பிறகு அரசு மற்றும் காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
உயர் அலுவலர்களுக்கு தனி ஆர்டர்லிகளை நீக்கிவிட்டு, கணிணி, ஓட்டுநர் தேவை என்றால் பணி அடிப்படையில் காவலர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அரசாணையின்படி சில உயர்மட்ட காவலர்கள் சொந்த வாகனங்களைப் பணிக்கு உபயோகப்படுத்துவதால், சில காவலர்கள் ஓட்டுநர்களாகப் பணியில் அமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ’’சட்டம் எப்போதெல்லாம் மீறப்படுகிறதோ? அப்போதெல்லாம் இந்நீதிமன்றம் தனது கண்களை மூடிக் கொண்டிருக்காது. அடிமட்ட காவலர்கள் தொடங்கி அனைத்துக் காவலர்களின் நடத்தைகளை கேள்வி எழுப்பும் நீதிமன்றம்? ஏன் உயர்மட்ட காவல் அலுவலர்கள் தவறு செய்தால் கேள்வி எழுப்பக்கூடாது. உயர்மட்ட அலுவலர்கள் உதாரணமாக இல்லாதபோது, அடிமட்ட காவலர்களை எப்படி நாம் சட்டப்படி செயல்பட வைக்க முடியும்.
1979ஆம் ஆண்டு ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டுவிட்டது: காவல் துறை எப்போதும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும், இல்லாவிடில் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் போல இங்கேயும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் கடந்த 1979ஆம் ஆண்டு ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்டது. தற்போது வரை அதை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது. 39 ஆர்டர்லிகள் டிஐஜி வீடுகளில் இருப்பதாகத் தெரியவருகிறது.