சென்னை: கலாஷேத்ரா பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பாகத் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் குமாரி, முன்னிலையில் காலாசேத்ரா இயக்குனர்ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி, கல்லூரி உள்ளீட்டுப் புகார் குழு (ICC கமிட்டி) உறுப்பினர் உமா மகேஸ்வரி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள மகளிர் ஆணையம் அலுவலகத்தில் ஆஜராகினர். சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணையானது நடைபெற்றது.
இந்த விசாரணையின் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி, "நாங்கள் விசாரணைக்குச் சென்ற போது இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் இல்லாத காரணத்தால் இன்று நேரில் விளக்கம் கேட்க அழைத்திருந்தோம். இந்த நால்வர் மீதும் இதுவரை எந்த புகார் வரவில்லை என கூறினார். இதைத் தொடர்ந்து, கலாஷேசேத்ரா கட்டமைப்பு குறித்தும், அங்குப் படிக்கக்கூடிய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் மாணவிகள் தேர்வு எழுத வேண்டும். அவர்கள் ஆஃப்லைன் வழியாகத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர் அதையும் இயக்குநரிடம் அறிவித்துள்ளோம். மாணவிகள் இதுவரை பாலியல் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள ஐசிசி கமிட்டியின் உள்ளிட்டுப் புகார் குழு அறிக்கையைக் கேட்டுள்ளோம் என தெரிவித்தார்.