தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வுசெய்ய சென்ற சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுப்பு!

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பின் தரம் குறித்து தனியார் கட்டுமான நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அந்த குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வுசெய்ய சென்ற சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

By

Published : Feb 8, 2023, 8:03 PM IST

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பின் தரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆயிரம் விளக்கு காவலர் குடியிருப்பின் தரம் குறித்து ஆய்வுசெய்ய சென்ற சவுக்கு சங்கருக்கு அனுமதி மறுப்பு!

சென்னை: ஆயிரம் விளக்கு ஆண்டர்சன் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதிக் கழகத்தின் சார்பில் புதிதாக காவலர் குடியிருப்பு ஒன்று கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 186.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1036 குடியிருப்புகளை கட்டுவதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.சி.சி என்ற கட்டுமான நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, 2021ஆம் ஆண்டு அந்நிறுவனம் 95% கட்டுமானப் பணிகளை முடித்தது.

அதன்பின்பு திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வண்ணம் பூசல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். இந்த குடியிருப்பில் ஏராளமான காவலர் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த காவலர் குடியிருப்பில் சுவர் பூச்சு பெயர்ந்து விழுவதாகவும், கை வைத்தால் உதிர்ந்து கொட்டுவது போன்ற வீடியோ ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு தரமில்லாமல் கட்டியதாக புகார் எழுந்த நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பும் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் டிஜிபி ஏ.கே. விஸ்வநாதன் தரமில்லாத காவலர் குடியிருப்பு கட்டப்படுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட தனியார் கட்டுமான நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டடத்தின் குறைபாடுகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே இன்று காலை கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பை பார்வையிட சென்ற யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த, சவுக்கு சங்கர், 'நான் உள்ளே செல்ல முயன்றபோது பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு தரமின்றி கட்டப்பட்டுள்ளது. அதில் சுவர்கள் இடிந்து விழுவதாக எனக்கு தகவல் கிடைத்து நேரடியாக பார்வையிட வந்தேன்.

பொதுவாக காவலர் குடியிருப்புகள் தரமாக கட்டப்படுவதில்லை. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடியிருப்புகள் கட்டப்படும் போது அடிக்கடி தரம் ஆய்வு செய்யப்படுகிறது. காவலர் குடியிருப்புகள் கட்டப்படும் போது அப்படி பார்ப்பதில்லை’ என குற்றம்சாட்டினார். இதனால் இனி வரும் காலங்களில் காவலர் குடியிருப்புகள் தரமானதாக கட்டப்பட வேண்டும் எனவும்; கட்டப்பட்டதில் சரியான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: சென்னையின் தூய்மையான கடற்கரைகளின் Rank வெளியீடு - "பெசன்ட் நகர்" மீண்டும் முதலிடம்!

ABOUT THE AUTHOR

...view details