தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள வயர்மேன், ஹெல்பர் ஆகிய பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பணியாளர்களைத் தனியார் நிறுவனம் மூலம் நியமனம்செய்ய முன்னதாக மின்சார வாரியம் உத்தரவிட்டிருந்தது.
மின்சார வாரியத்தின் இந்த உத்தரவால் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை இதற்காக அமைத்தனர்.
இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் இன்று (டிச. 21) காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர்கள் தலைமையில் இன்று காலை தொடங்கி தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இது குறித்து, உப கோட்ட அளவில் தனியார் நிறுவனங்கள் மூலம் மின்வாரியத்தில் ஹெல்பர் மற்றும் வயர்மேன் பணியிடங்களை நிரப்புவதை திரும்பப் பெறும்வரை தங்களின் தொடர் போராட்டம் நடைபெறும் என ஊழியர்கள் முன்னதாகத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தனியார் மூலம் மின் ஊழியர்களைத் தேர்வுசெய்யும் அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் தங்கமணி தற்போது அறிவித்துள்ளார்.