தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் விலையில்லா புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாடப்புத்தகங்கள் மே மாதம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். இந்தாண்டு கரோனா தொற்று பரவலால் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய பாடப் புத்தகம் பாடநூல் கழகத்திடம் உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க தனியார் வாகனங்கள் மூலம் நேரடியாக கொண்டு சென்று பள்ளிகளில் அளிக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
"2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னர் நேரடியாக அந்தந்த பள்ளிகளிலேயே வழங்க வேண்டும். தமிழ்நாடு பாடநூல் கழக விநியோக மையங்களிலிருந்து தேவையான எண்ணிக்கையில் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலக வினியோக மையங்களுக்கு ஜூன் 18ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும்.