சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ், டெக்கான் ஏர்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில் இல்லை. பயன்பாட்டில் இல்லாத டெக்கான் ஏர்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் ஏதும், சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை.
ஆனால் என்.இ.பி.சி, கிங்ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் என்.இ.பி.சி நிறுவனத்துக்கு சொந்தமான 4 விமானங்கள் மற்றும் ஒரு ஜெட் ஏர்வேஸ் விமானம் கடந்த ஆண்டு அப்புறப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் பயன்பாட்டில் இல்லாத தனியாருக்கு சொந்தமான மேலும் 3 விமானங்களை அப்புறப்படுத்த விமான நிலையம் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த விமானங்களில் பறவைகள் கூடுகட்டி வசித்து வருவதால், விமானப் போக்குவரத்துக்கு பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது. அதை கருதியே, 3 பழைய விமானங்களையும் உடனடியாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.