சென்னை: ராமநாதபுரம் அரியக்குடியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கீர்த்திகா. இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கீர்த்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கீர்த்திகாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்துக்கு பின்னரான சிறிது நேரத்திலேயே கீர்த்திகா, அவரது சிசு இருவரும் உயிரிழந்தனர். இதனையடுத்து சிகிச்சையின் போது மருத்துவர் இல்லாமல், செவிலியர் மட்டுமே இருந்ததால் வழங்கப்பட்ட முறைற்ற சிகிச்சையின் காரணமாகவே உயிரிழப்பு நிகழ்ந்ததாக கீர்த்திகாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பான செய்தி கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நாளிதழ்களில் வெளியானது. அதன் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்தார்.