கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றின் காரணமாக நடப்பாண்டில் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவது காலதாமதமானது. அதுவரை மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன.
10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஏப். 15-க்குள் பாடங்களை முடிக்க உத்தரவு - தீரஜ்குமார்
சென்னை: பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளி பாடங்களை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஜனவரி 19ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதிமுதல் 9, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் தீரஜ்குமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக நேற்று (பிப். 24) ஆலோசனை நடத்தினார். அப்பொழுது பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும், பத்து, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்தலுக்குப் பிறகு நடத்துவதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.