தமிழ்நாடு முழுவதும் ஒரு வார காலமாக 114ஆவது முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 59ஆவது தேவர் குருபூஜை ஆகிய விழாக்கள் நடைபெற்றன. இதில் பசும்பொன், கோரிப்பாளையம், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண், ஆண் காவலர்களை சிலர் தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசுப் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்தது, அரசுப் பேருந்து, காவல்துறை வாகனம், வருவாய்த்துறை வாகனம் ஆகிய வாகனங்களில் மீது ஏறி நின்று சிலர் நடனமாடிய சம்பவம் ஆகியவை சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
மேலும் சென்னை, நந்தனம் பகுதியில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கும்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர்களை அநாகரிகமாக கிண்டல் செய்த இருவரை தேனாம்பேட்டை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டியவர்களையும், பேருந்துக் கண்ணாடிகளை உடைத்தும் அரசு வாகனங்கள் மீது நடனமாடிய வீடியோக்களையும் அடிப்படையாக வைத்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்டக் காவல்துறையினருக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: தேவர் ஜெயந்தி விழாவின் போது அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு!