தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்! - Rajesh Das

Rajesh Das: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 5, 2024, 6:37 PM IST

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் 16ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான தீர்ப்பு ஜனவரி 6ஆம் தேதி (நாளை) அறிவிக்கப்படும் என விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை, வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வாதிடுவதை தவிர்ப்பது போன்ற எண்ணம், முதன்மை அமர்வு நீதிபதி மனதில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது எனக் கூறியுள்ளார்.

வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்ட நிலையில், அமர்வு நீதிபதி தீர்ப்பை தள்ளிவைத்துள்ளதாகவும், அதனால் வழக்கை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தால் தனக்கு நியாயம் கிடைக்காது என்பதால், விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். இந்த மனு மீது முடிவெடுக்கும் வரை விழுப்புரம் அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “குற்றம் சாட்டப்பவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்கப்படவில்லை. இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் நீதிமன்ற விசாரணையில் நேரில் ஆஜராக முடியவில்லை. உரிய விளக்கமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தன்னுடைய விளக்கத்தை கேட்காமல் ஒருதலைபட்சமாக நீதிபதி விசாரணை செய்து, வழக்கின் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார். இந்நிலையில் தீர்ப்பு வழங்கினால், அது தனக்கு எதிராக மட்டுமே அமையும் என்பதால், வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி தனது விளக்கத்தை அளிக்க 6 முறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக வழக்கில் ஆஜராகாமல் இருந்துள்ளார். அதனால், விசாரணை முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரி நீதிமன்றத்தின் மீது எந்த குற்றமும் சுமத்தவில்லை. தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதைக் கூறி வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். அதனால் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 6ஆம் தேதி மேல்முறையீட்டு
வழக்கில் தீர்ப்பு வழங்குவதை தள்ளிவைக்க அறிவுறுத்தும்படி வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details