புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுப்பதற்கு அரசுக்கு அனுமதி அளித்தபோதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது. அதேபோல கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய, பாரத் ஸ்டேட் வங்கி மதிப்பீட்டாளர்கள் மூன்று பேரின் பெயர்களை பரிந்துரைக்க, வங்கி துணை பொது மேலாளருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாரத ஸ்டேட் வங்கி பரிந்துரைத்த அலுவலர்கள் பட்டியலில் ஒருவரை தேர்ந்தெடுத்து, கோயில் நிலத்தை மதிப்பீடு செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அரசு தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு இருவரும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.