சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே அறிவித்திருந்தது. இந்நிலையில், டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தென் தமிழகம் மற்றும் தென் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளைய(டிச.16) மழை நிலவரம்: இது குறித்து முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், "மேலும் நாளை(டிச.16) இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 17ஆம் தேதிக்கான மழை நிலவரம்: இதைத்தொடர்ந்து, 17-ஆம் தேதி அன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று தெரிவித்திருந்தது.