சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது , "லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென் தமிழ்நாட்டை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்பதால் இன்று (நவ.03) அடுத்த 24 மணி நேரத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, சேலம், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
நாளை (நவ.04) டெல்டா மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.