சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "பருவமழைக் காலங்களில் ஆங்காங்கே சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவது, தெருக்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக அப்புறப்படுத்துவது, வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்வது, பருவமழை துவங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை ஒரு மாநில அரசின் முக்கியமான கடமைகளாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கடந்த ஆண்டு பெருமழை காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகவும், இந்த ஆண்டு அதுபோன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்றும், வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படுவதாகவும், முக்கியக் கால்வாய்களில் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்து, இந்த ஆண்டு மழை நீர் தேங்காது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறி இருந்தார்.
முதலமைச்சரே 'ஓரளவு' என்று சொல்வது இந்த ஆண்டும் மழை நீர் தேங்குமோ என்ற சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், நேற்று முன் தினம் பெய்த ஒரு மணி நேர மழையில் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த மழைக்கும், வழக்கம் போல் பாதிக்கப்படும் பகுதிகளான கோடம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, கிண்டி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், காரப்பாக்கம், செம்மஞ்சேரி, திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், ராயபுரம், பிராட்வே, கொடுங்கையூர், தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை என பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள், மின் வாரியப் பணிகள், குடிநீர் வடிகால் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகளுக்காக சென்னை முழுவதும் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.