சென்னை:வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி பேசுகையில் ஓபிஎஸ் பொதுக்குழுவுக்கு வராமல் ,"ரவுடிகளுடன் தலைமை அலுவலகத்திற்கு சென்று அம்மாவின் அறையை கடப்பாறையை போட்டு உடைத்துள்ளார்.
தலைமை கழகத்தில் இருந்த கோப்புகளை எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல் லேப்டாப்களை அடித்து உடைத்து விட்டார்; இவர் தான் கட்சியின் விசுவாசியா ? சொந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொள்ளை அடிப்பவர் எப்படி விசுவாசியாக முடியும்; எம்ஜிஆர் நமக்களித்த கட்டடத்திற்குள் நுழைந்து வன்முறையை தூண்டிவிட்டு , ரவுடிகளை வைத்து அட்டகாசம் செய்த ஓபிஎஸ் யாருடன் கூட்டு வைத்து இருக்கிறார் என்று நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும் என்றார்.
தற்போது ஓபிஎஸ் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது; நாம் நன்றாக செயல்பட்டால் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்; ஒற்றைத் தலைமை வேண்டும் என பல முறை ஓபிஎஸிடம் பேசப்பட்டதாகவும் அவர் விட்டுக் கொடுக்கிறேன் விட்டுக் கொடுக்கிறேன் என்றார்; ஆனால் நாங்கள் தான் பலமுறை விட்டுக் கொடுத்தோம்...
அம்மாவுக்கு விசுவாசமாக இருந்ததாக சொல்லுகிறார், 1989ல் ஜெயலலிதா போடிநாயக்கனூரில் போட்டி போட்ட போது எதிரணியினருக்கு ஆதரவாக செயல்பட்டவர் தான் ஓபிஎஸ்.. நான் 1974ல் கட்சியில் இணைந்த காலத்தில் இருந்து கிட்டத்தட்ட 48 ஆண்டுகாலம் அதிமுகவின் விசுவாசியாக இருந்து வருகிறேன் , பல பொறுப்புகளில் இருந்து என்னால் முடிந்த நலன்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளேன் என்று கூறினார்.
என்னை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , பொதுக்குழு உறுப்பினர்கள் , முன்னணி தலைவர்கள் முதலமைச்சர் ஆக்கினார்கள்; உங்களில் ஒருவனாக இருந்தேன்...உங்களில் ஒருவனாக இருந்து எப்போதும் செயல்படுவேன் , எனக்கு கட்சி தான் உயிர் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.