சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய(மார்ச் 18) தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனிடையே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிட் பாக்கெட் அடிப்பது போல பொதுச்செயலாளர் பதவியை பறிக்க ஈபிஎஸ் முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். தான் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக கட்சி விதிகளை ஈபிஎஸ் மாற்றியுள்ளார் என்றும், அவர் ஒரு சர்வாதிகாரி என்றும் ஓபிஎஸ் கடுமையாக குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ்-ன் கருத்துக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "கடந்த ஆட்சியில் உடுமலை ராதாகிருஷ்ணனிடம் வீட்டு வசதித்துறையை பிட் பாக்கெட் அடித்தவர் ஓபிஎஸ்தான். அதே போல் என்னிடம் இருந்த நிதித்துறையினையும் பிட் பாக்கெட் அடித்தவர் ஓபிஎஸ் தான்" என விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் இன்று(மார்ச்.19) செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "வீட்டு வசதித் துறையையும், நிதித்துறையையும் கொடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். அதை நாங்கள் பிட் பாக்கெட் அடிக்கவில்லை. தற்போது பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமிதான் பிட் பாக்கெட் அடிக்க நினைக்கிறார். இது திருட்டுக்கு சமமானது.
கட்சியையும், சின்னத்தையும் நாங்கள் இன்னும் இழக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஈபிஎஸ் தரப்புக்கு சின்னத்தை கொடுக்கவில்லை, கட்சி சின்னமும், கட்சியும் எங்களிடம்தான் உள்ளது. நேரம் வரும்போது அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் கைக்கு வரும்" என்று கூறினார்.