சென்னை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் தமிழ்நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருவரும் இணைந்து ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர். முதல்முறையாக ஓபிஎஸ் அணியும் அமமுகவும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்துவதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகே, ஓபிஎஸ் அணியின் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? இந்த கொள்ளை நடைபெறும் பொழுது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. எப்போதும் துண்டிக்கப்படாத மின்சாரம் கொள்ளை சம்பவம் நடைபெறும் போது துண்டிக்கப்பட்டது எப்படி?" என்ற கேள்விகளை எழுப்பினார்.
மேலும் இச்சம்பவத்திற்கு அப்போதைய மின்சார துறை அமைச்சராக இருந்த தங்கமணி பொறுப்பேற்க வேண்டும் என்றும், இந்த சம்பவம் நடைபெறும் பொழுது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான் மாநிலம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார்.
இதையும் படிங்க:மணிப்பூர் வன்முறை:முதலமைச்சர் ஸ்டாலின் மணிப்பூர் முதலமைச்சருக்கு கடிதம்; என்ன இருந்தது அந்த கடிதத்தில்!