சென்னை:மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட நுழைவு வாயிலில் நேற்று இரவு 9.30 மணியளவில் 10க்கும் மேற்பட்ட நபர்கள் திடீரென ஓ.பி.எஸ் தான் அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கோஷமிட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது, திடீரென அக்கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோலை பறித்து தண்ணீர் ஊற்றி அண்ணாசதுக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தீக்குளிக்க முயன்ற நபர் தேனாம்பேட்டை வரதராஜபுரத்தை சேர்ந்த கேசவன்(33) என்பதும் அதிமுக தென்சென்னை வடகிழக்கு மாவட்ட இணை செயலாளராக இருந்து வருவதும் தெரியவந்தது.