அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது” ”உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி வளாகத்தில் தடுப்பூசித் தொழிற்சாலை என அறிவிப்புகளை அறிவித்துவிட்டு, இன்று தடுப்பூசி இல்லை என்று திமுக அரசு கை விரிப்பதை பார்க்கும்போது 'வாய் சொல்லில் வீரரடி’ என்ற மகாகவி பாரதியாரின் பாடல் தான் அனைவரின் நினைவிற்கு வருகிறது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை பெற உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, அதில் எந்த நிறுவனமும் கலந்து கொள்ளாதையடுத்து அந்தக் கொள்முதல் திட்டம் தமிழ்நாடு அரசால் கைவிடப்பட்டது.
தடுப்பூசி தயாரிப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்கவேண்டும்
இதனைத் தொடர்ந்து, ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும் எச்.எல்.எல் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிக்கும் நவீனத் தொழிற்சாலை சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும், அதனை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தால், தமிழ்நாடு அரசு ஒரு தனியார் நிறுவனத்தை அடையாளம் கண்டு பங்குதாராக சேர்த்து, தடுப்பூசி தயாரிப்பதற்கான பணிகளை விரைந்து தொடங்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும், இதில் உடனடியாக தலையிட்டு மேற்படி நிறுவனத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும் என்றும் கேட்டு இந்தியப் பிரதமருக்கு மே 26ஆம் தேதி கடிதம் ஒன்றினை தமிழ்நாடு முதலமைச்சர் எழுதியிருந்தார். இன்று வரை இந்தத் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், ஜூலை 1ஆம் தேதி நிலவரப்படி, ஒருவருக்கு இரண்டு தடுப்பூசி என்பதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 16 கோடிக்கும் மேலாக தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 42 ஆயிரத்து 773 தடுப்பூசிகள் தான் செலுத்தப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவு
அதாவது 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. கரோனா நோயினை ஒழிக்க, மூன்றாவது அலை வராமல் தடுக்க தடுப்பூசி தான் ஒரே ஆயுதம் என உலக சுகாதார அமைப்பு உள்பட அனைவரும் தெரிவிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் மீதமுள்ள 90 விழுக்காடு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான்.